Sunday, 11 January 2015

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள்: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

கோப்பு படம் 
 
 
தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 


பி.காம். படித்துவிட்டு ஓர் ஆண்டாக சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி டாக்டர் வெங்கடேசன் (57) என்பவரை கடந்த நவம்பர் மாதம் போலீஸார் கைது செய்தனர். 

கடந்த 5 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி சோதனையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் 7, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு போலி டாக்டர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். 


எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் மருத்துவம் படித்த உண்மையான டாக்டர் யார்? போலி டாக்டர் யார்? என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 


80 ஆயிரம் டாக்டர்கள் 
 
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் வி.எஸ்.துரைராஜ் கூறியதாவது: 

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915-ம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து இருப் பார்கள். சில டாக்டர்கள் வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். 

போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்க டாக்டர்கள்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

மருத்துவம் படித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் அனைவரும் தங்களுடைய பதிவு எண் சான்றிதழை, சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். 

நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

30 ஆயிரம் போலிகள் 
 
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வரும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். 

போலி டாக்டர் செய்யும் தவறு, உண்மையான அனைத்து டாக்டர்களையும் பாதிக்கிறது. இதனால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடுகிறது. 

எனவே போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மாவட்டந் தோறும் தனிப்படை அமைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 


புகார் அளிக்கலாம் 
 
பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்லும் போது, அந்த டாக்டர் போலி என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது போலி டாக்டர் என தெரியவந்தாலோ உடனடியாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு, எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். 


தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை 044-26265678 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். போலி டாக்டர் என தெரியவந்தால், போலீஸில் ஒப்படைத்து விடுவோம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் வி.எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.

1 comment:

  1. I started on COPD Herbal treatment from Ultimate Life Clinic, the treatment worked incredibly for my lungs condition. I used the herbal treatment for almost 4 months, it reversed my COPD. My severe shortness of breath, dry cough, chest tightness gradually disappeared. Reach Ultimate Life Clinic via their website www.ultimatelifeclinic.com . I can breath much better and It feels comfortable!

    ReplyDelete