Saturday, 10 January 2015

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன்?

 
 
 
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம். 


தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ (Halitosis) என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. 


என்ன காரணம்?

 
பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள். 

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருள்களுடன் வினை புரியும். இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது கந்தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். 

பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள். வாய்ப் புண், வாய்ப் புற்றுநோய், 'சிபிலிஸ்' எனும் பால்வினை நோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் நோய் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.


மேலும், மூக்கில் சதை வளர்வது (Nasal polyp), அந்நியப் பொருள்கள் மாட்டிக்கொள்வது, சைனஸ் அழற்சி (Sinusitis), தொண்டைப் புண், தொண்டைச் சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ் (Lung abscess), நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம். இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய நோய்களின்போதும் வாய் நாற்றம் உண்டாவது உண்டு. 


என்ன சிகிச்சை?

 
வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ‘ஸ்கேலிங்' முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, எண்டாஸ்கோபி (Endoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றால் மற்றக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 

தடுப்பது எப்படி?

 
வாய் நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது. 

அடுத்து, சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.
இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்ட பின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி பற்களைக் குத்தும்போது, குச்சி பல் ஈறுகளில் பட்டு புண்ணை ஏற்படுத்திவிடும், இது வாய் நாற்றத்தை அதிகரித்துவிடும். எனவே, பல்குச்சிகளைக் கவனமாகக் கையாள வேண்டும் அல்லது இதற்கென்றே உள்ள பல்துலக்கி வயர்களைப் பயன்படுத்த வேண்டும். 

செயற்கைப் பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி, அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.பல் மற்றும் ஈறுகளின் நலனைக் கெடுக்கிற புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. 

செயற்கை மணமூட்டிகள் தேவையா?
 
நேர்காணலுக்குச் செல்லும்போதும் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதனால் இவற்றுக்குப் பதிலாக லவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் அடக்கிக்கொண்டால் வாய் மணக்கும். 

வாய் உலரும் பிரச்சினை
 
வயது ஆக ஆகப் பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து, வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய் நாற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த நிலைமையைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகளைச் சாப்பிட்டு வந்தால் வாய் உலராது. மேலும், வாயை உலர வைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வதும் முக்கியம். 


நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதிக தாகம் எடுக்கும். அப்போது வாய் அடிக்கடி உலர்ந்துவிடும். இதன் விளைவால், பல் ஈறுகள் கெட்டு வாய் நாற்றம் ஏற்பட வழி உண்டாகும். 

மவுத் வாஷ் பயன் தருமா?
 
வாய் நாற்றத்தைப் போக்கி, புத்துணர்வை உண்டாக்க என்று பல்வேறு ‘மவுத் வாஷ்’ திரவங்கள் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது. ஏனென்றால், மவுத் வாஷைப் பயன்படுத்தும்போது தீமை தரும் பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

‘ஃபிளாஸ்ஸிங்’ உதவும்!
 
பல்துலக்கியால் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்குப் பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குள்ள உணவுத் துகள்தான் நமக்கு எதிரி! இதை முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம். 

பல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூலை’வாங்கி, இரண்டு பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி, மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத் துகள், கரை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். அதன் பிறகு, வாய் நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.

1 comment:

  1. I started on COPD Herbal treatment from Ultimate Life Clinic, the treatment worked incredibly for my lungs condition. I used the herbal treatment for almost 4 months, it reversed my COPD. My severe shortness of breath, dry cough, chest tightness gradually disappeared. Reach Ultimate Life Clinic via their website www.ultimatelifeclinic.com . I can breath much better and It feels comfortable!

    ReplyDelete