Saturday 20 September 2014

ஆரோக்கியத்தைக் காட்டும் நகங்கள்

ஆரோக்கியத்தைக் காட்டும் நகங்கள்

 

 
 
 
 நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடிகள் என்றால் மிகையில்லை. நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை அவை காட்டிக்    கொடுத்துவிடும்.

உதாரணத்துக்கு, சிலநேரங்களில் சிலரது கை விரல் நகங்கள் வழக்கத்துக்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்தத் திடீர் மாற்றம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். உடனே மருத்துவரை அணுகுவதுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை மற்றும் உணவுகளை உட்கொள்வது நலம்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி அழுக்காக இருப்பதுபோல் தோன்றும். இது ‘பங்கஸ்’ எனப்படும் பூஞ்சைப் பாதிப்பாகும்.

கைவிரல் நகம் நீல நிறத்தில் இருந்தால் ‘சயனோசிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறது என்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும்.

சருமத்தைப் போல சில சமயங்களில் நகம் அதிகமாகக் காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.

இப்படி ஓர் எச்சரிக்கை செய்யும் கருவியாக உள்ள நகங்களை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதாவது, மண்ணைத் தோண்டுவது, பழங்களின் தோல் உரிப்பது, எதையாவது சுரண்டுவது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்தச் செயல்கள் எல்லாம் நகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமித் தொற்று ஏற்படவும் காரணமாகும்.

வேதிப்பொருட்கள் சேர்த்த நகப்பூச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சமையல் அறை, பசை மற்றும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது கையுறை அணிந்துகொள்ள வேண்டும்.

நகங்கள் தேவையில்லாமல் வளர்கின்றன என்று நினைக்க வேண்டாம். இவை விரல் நுனிகளுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன.

கெரட்டின் என்னும் கழிவுதான் நகமாக வளர்கிறது. நகங்களும் சுவாசிக்கும் என்றால் நம்ப மாட்டீர்கள்தானே? ஆனால் அது  உண்மை.

நகங்களைக் காப்பதன் மூலம் நாம் நமது நலத்தைக் காத்துக்கொள்ளலாம்.
 
 
 
 

No comments:

Post a Comment